Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் பகீர் குற்றச்சாட்டு: சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு

ஜுலை 25, 2019 06:05

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல்கள் தொடர்பான வழக்குகளை முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரித்து வருகிறார். இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு காதர் பாஷா, சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்கவைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து, என்னை பழிவாங்கும் நோக்கத்தில் என் மீது முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்தார். அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி என்னை துன்புறுத்தினார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

மேலும், தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோருக்கு புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேல் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் செல்வராஜ் வாதாடுகையில், “சிலை கடத்தல் தொடர்பாக இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், சிலை கடத்தல் சம்பவத்தில் தமிழக அமைச்சர்கள் இருவருக்கு தொடர்பு உள்ளது என்பதை அவர் தெரிவித்து உள்ளார்” என்று கூறினார்.

எனவே, இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலை ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலை ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறினார். மேலும், சிலை கடத்தலில் அமைச்சர்களின் தொடர்பு இருந்தால், அதுதொடர்பான ஆதாரங்களுடன் பதில் மனுவை தாக்கல் செய்யவும் பொன் மாணிக்கவேல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
 

தலைப்புச்செய்திகள்