Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 பெண்களை மணந்த ராமநாதபுரம் வாலிபர்

ஜுலை 26, 2019 08:44

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் பகுதியை சேர்ந்த கோட்டை ராஜூ என்பவரது மகள் கோமலா தேவி பி.காம். பட்டாரி. அதே பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கும், மாடக்கொட்டான் பகுதியை சேர்ந்த ராமு மகன் கங்காதரனுக்கும் பெரியோர்களால் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம் முடிந்து துபாயில் வேலைக்காக சென்ற கங்காதரன் தனது மனைவியின் நகை மற்றும் குடும்ப பணத்தை கொண்டு துபாய் சார்ஜாவில் அல்தரன் என்ற பெயரில் தனியார் பணிகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை நடத்தி வந்தார். தொடங்கிய தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தவுடன் தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று வீடெடுத்து தங்க வைத்துள்ளார். நாட்கள் சில கடந்த நிலையில் கங்காதரன் நடவடிக்கை சரியில்லாததை உணர்ந்துள்ளார் கோமலா தேவி.

இரவு நேரங்களில் வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு அங்குள்ள பப்புகளுக்கு சென்று நடன அழகிகளுடன் நெருக்கம் காட்டியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து விசாரித்த மனைவி கோமலாதேவியை அவ்வப்போது இந்தியா அழைத்துவந்து விட்டு சென்றுள்ளார் கங்காதரன். ஒரு முறை இந்தியா வந்த கங்காதரன் செல்போனுக்கு இரவு 12 மணிக்கு மிஸ்டு கால் வந்துள்ளது. அதனை பார்த்துவிட்டு கங்காதரன் தூங்கியவுடன் அவரது மனைவி சந்தேகமடைந்து அந்த குறிப்பிட்ட நம்பரை குறித்து வைத்துக்கொண்டுள்ளார்.

பின்னர் கங்காதரன் வெளியே சென்றவுடன் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட கோமலாதேவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதிர்முனையில் பேசிய பெண் தன்னை கங்காதரன் மனைவி என அறிமுகம் செய்துகொண்டதோடு தனக்கு திருமணம் முடிந்து தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரை விசாரித்தபோது அவர் சின்னசேலம் பகுதியை சேர்ந்த கவிதா என்பது தெரியவந்ததது.

இதுகுறித்து கங்காதரனிடம் கேட்டபோது கவிதா என்ற பெயரில் யாரையும் தனக்கு தெரியாது என மழுப்பியுள்ளார். கவிதாவை கண்காணிக்க எண்ணிய கோமலா தேவி இரவு கங்காதரன் தூங்கும் வரை காத்திருந்து அவரது செல்போனை ஆய்வு செய்தபோது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. கவிதா மட்டுமின்றி சென்னையை சேர்ந்த யமுனா என்ற பெண்ணையும் திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடலை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.

அது தொடர்பாக கடந்த 2005-ம் ஆண்டு கங்காதரன் மீது மோசடி புகாரை அளித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்துவரும் நிலையில் மீண்டும் ஒருநாள் கோமலா தேவியிடம் வந்து தான் திருந்திவிட்டதாகவும் இப்போது மிகுந்த கடனில் சிக்கியிருப்பதால் உன்னுடைய பெயரில் இருக்கும் கம்பெனியை தனக்கு எழுதி தருமாறும் கூறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று கடலில் இறங்கி சத்தியம் செய்துள்ளார்.

அதனை உண்மை என நம்பி கம்பெனியை மாற்றி எழுதிக்கொடுத்தபோதிலும் தன்னுடைய சித்து விளையாட்டை தொடர்ந்த கங்காதரன் மேலும் சென்னையை சேர்ந்த தீபா என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்தார். அவருக்கும் குழந்தை இருப்பது தெரிந்து கோமலாதேவி அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதுமட்டுமின்றி கங்காதரன் தன்னுடைய குடும்ப அட்டையில் கவிதா மற்றும் அவரது குழந்தையான ஸ்ரீதரன் ஆகியோரை சேர்த்துள்ளார்.

மேலும் 3-வது திருமணம் செய்வதற்காக அந்த ரேசன் கார்டில் திருமணம் என குறிப்பிட்டு அவரது பெயரை நீக்கம் செய்துள்ளார். மேலும் இறுதியாக 4-வது திருமணம் செய்த தீபா என்ற பெண்ணின் பாஸ்போர்ட்டில் கணவர் என அவரது பெயரை சேர்த்துள்ளதோடு வீட்டு முகவரியாக ராமநாதபுரம் முகவரியை கொடுத்து அரசு ஆவணங்களை முறைகேடாக பெற்றுள்ளார்.

ஒவ்வொரு முறை ஏமாறும் பெண்களையெல்லாம் குடும்ப வழக்கப்படி உறவினர்கள் முன்னிலையிலேயே கங்காதரன் திருமணம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்ட காலம் வாழ்ந்துவிட்டு குழந்தை பிறந்தவுடன் ஆண் குழந்தை எனில் அதற்கு தன்னுடைய அடையாளமாக தரன் என முடியும் பெயரை வைத்துவிட்டு அடுத்த திருமணத்திற்கு தயாராகி விடுவதாக கோமலாதேவி குற்றம்சாட்டி உள்ளார்.

“நான் அவனில்லை” என்ற தமிழ் சினிமா பாணியில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பொய்யை சொல்லி அவர்களை திருமணம் செய்துவிட்டு குழந்தை பிறந்த பின்னர் பறந்து செல்லும் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோமலா தேவி புகாரளித்துள்ளார்.

திருமணம் முடிந்து கங்காதரன் மற்றும் கோமலாதேவிக்கு 10 வயதில் ஹரிதாரன் மற்றும் 9 வயதில் பெண்குழந்தை உள்ளது. இரண்டாவது மனைவி கவிதாவிற்கு ஸ்ரீதரன், சென்னையை சேர்ந்த யமுனா என்ற பெண்ணிற்கு கிரிதரன் என்ற பெயரில் குழந்தைகள் உள்ளதோடு 4-வது மனைவி தீபாவிற்கு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்