Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ஜுலை 26, 2019 10:52

சென்னை: சென்னை மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதன்குமார் என்பவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், ஓட்டுநர் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவல் துறை அதிகாரிகளுக்கும் பொருந்தும். அப்படி காவல்துறை அதிகாரிகள் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அந்தந்த மண்டலத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகள் இது தொடர்பாக கண்காணித்து வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதன் என்பவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. எனவே, அவரை பணியிடைநீக்கம் செய்து தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர் இரண்டு முறை தலைக்கவசம் அணியாமல் சென்றதால் தான், பணியிடை நீக்கம் செய்ததாக தகவல் கூறப்படுகிறது. ஏற்கனவே, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஒட்டி சென்ற 100க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். தலைக்கவசம் அணியாமல் செல்லக்கூடிய நபர்களை பிடிப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சோதனை சாவடி மூலம், தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவலர்களின் விவரங்களை குறித்து அறிக்கையாகவே அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே, மாம்பலம் காவல் ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்