Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம் அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது

ஜுலை 26, 2019 11:01

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. இங்கு நாட்டு துப்பாக்கிகள் மூலம் மான்களை வேட்டையாடும் சமூக விரோதிகள் தோல், கொம்பு, எலும்புகளை நீக்கிவிட்டு வெளி மாவட்டங்களுக்கும் நட்சத்திர ஓட்டல்களுக்கும் அதிக விலைக்கு மான் இறைச்சியை விற்பனை செய்வதாகவும் ஒரே லைசென்ஸ் மூலம் பலநாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மான் வேட்டையை தடுக்க சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் தங்கதுரை தனது  பார்வையில் 5 பேர் கொண்ட தனிப்படையை அமைத்தார். இந்த குழுவினர் வேட்டையாடப்படும் மான்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை அறிந்து அங்கு மாறுவேடத்தில் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் வேட்டையாடும் கும்பலை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தனர். 

இந்த நிலையில் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து மான் இறைச்சியை விற்பனை செய்வதற்காக வந்த வேட்டை கும்பலின் தலைவன் லோகநாதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அவனை கைது செய்து அவனிடம் இருந்த சுமார் 20 கிலோ மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் அதே வனப்பகுதிக்குள் மான்கறி விற்பனைக்காக யுனோவா காரில் வந்த அதே கும்பலை சேர்ந்த லட்சுமணன் என்பவரையும் கைது செய்து அவரிடம் இருந்த 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும் வேட்டை கும்பலை சேர்ந்த பூபதி, ஹரி, மான் மணி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட லோகநாதன், லட்சுமணன் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

தனிப்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரத்திலேயே வேட்டை கும்பலை சேர்ந்த இருவரை கையும் களவுமாக கைது செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்