Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழை விட சமஸ்கிருதம் கி.மு.3000 ஆண்டுகள் பழமையானது: மீண்டும் சர்ச்சை

ஜுலை 26, 2019 11:12

சென்னை: தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகங்களில் பிழைகள் மற்றும் தேசிய கீதத்தை தவறாக அச்சிடப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என பாடப்புத்தகத்தில் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் சர்ச்சையானது. 12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பக்கம் எண் 142ல் மொழிகளின் தொன்மை வரலாற்றை குறித்து படமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கி.மு.300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. 

அதே பக்கத்தில் சீன மொழி 1,250 ஆண்டுகள் பழைமையான மொழி என்றும், ஹீப்ரு மொழி 1,000 ஆண்டுகள் பழமையான மொழி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் லத்தீன் மொழி கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 75 ஆண்டுகள் பழமையான மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு மொழிகளின் தொன்மைகளை சரியாக குறிப்பிட்ட சமயத்தில், தமிழன் தொன்மை குறித்து அனைவரும் அறிந்த நிலையில், சமஸ்கிருதம் 2000 ஆண்டுகள் பழமையானது என்றும், தமிழ் மொழி 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என குறிப்பிடப்பட்டிருப்பது தமிழ் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மிகப்பெரிய தவறு என்றும், உலகிற்கெல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி தான் என்றும் ஆசிரியர் மத்தியில் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இது குறித்து, பள்ளிக்கல்விதுறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, 11, 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பல்வேறு தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறுகள் தவறாக இடம் பெற்றிருந்தது. இது போன்ற தவறான கருத்துக்கள் பட்டியலிடப்பட்டு இதுவரை 19 பிழைகள் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கையாகவே அனுப்பப்பட்டது. அதன்படி, இந்த தமிழன் தொன்மை குறித்த சர்ச்சை கருத்தை உடனடியாக நீக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மீண்டும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளது.

தலைப்புச்செய்திகள்