Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வந்த போலி மருத்துவமனைக்கு சீல்

ஜுலை 26, 2019 11:17

சென்னை: சென்னை பெரம்பூரில் போலி கிளினிக் செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை பெரம்பூர் பட்டேல் சாலையில் லஷ்மி கணேஷ் என்ற பெயரில் அரபிந்தா சிக்தார் என்பவர் போலி கிளினிக் நடத்தி வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்கத்தில் உள்ள அமலாக்க பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவர் முத்துராமலிங்கம் தலைமையில் அமலாக்க துறையினர் அந்த இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மாற்று மருத்துவம் என்ற பெயரில் மருத்துவப் படிப்பு இல்லாத வகையில் ஓராண்டு டிப்ளமோ படித்த அரபிந்தா சிக்தார் என்பவர் போலி மருத்துவம் செய்து வந்ததும் அவர் கொல்கத்தா சென்றிருப்பதும் தெரியவந்தது. இது தவிர வடநாட்டு மாநில நபர் ஒருவர் அங்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை சப்ளை செய்ததும் சோதனையில் கண்டறியப்பட்டது. 

இதற்கிடையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வந்த புகாரை அடுத்து அங்கு சோதனை நடத்திய அதிகாரிகளிடம் தாம் முறையான சான்று உடனடியாக வாங்கிவிடுவதாக உத்தரவு அளித்தது மட்டுமல்லாமல் இனிமேல் இந்த இடத்தில் மருத்துவம் செய்யப்போவதில்லை என்று உறுதி அளித்ததை அடுத்து அவருக்கு கால அவகாசம் கொடுத்திருந்தனர். ஆனால் சொன்னபடி செய்யாமல் தொடர்ந்து இந்த கிளினிக்கை நடத்தி மூலம், பௌத்திரம், விரை வீக்கம், ஆண்மை குறைவு போன்ற குறைபாட்டிற்கு மருத்துவம் செய்து வருவது சோதனை மூலம் உறுதியானது. இதை அடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்கக அதிகாரிகள் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து கொல்கத்தா சென்றுள்ள போலிமருத்துவருக்கு அலுவலகத்தில் ஆஜர் ஆக வேண்டும் என நோட்டீஸ் அளித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்