Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை: ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி?

ஜுலை 26, 2019 12:08

சென்னை: இந்தியா முழுவதும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம்) மையமாக கொண்டு நடத்தப்பட்ட நூதன கொள்ளைகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த புகார்களின் எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 911ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 980ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-2019 நிதியாண்டில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை மையமாக கொண்டு நடந்த நூதன கொள்ளைகளின் மூலம் சுமார் 21.4 கோடி ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் அட்டை (டெபிட் கார்டு) அல்லது கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) சொருகும் இடத்தில் கூடுதலாக பொருத்தப்பட்டு, அதன் மூலம் குறிப்பிட்ட அட்டையின் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஒருவருக்கு தெரியாமலே பதிவு செய்துக்கொள்ளும் கருவியே ஸ்கிம்மிங் கருவியாகும்.

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் வங்கி அட்டையை சொருகும் இடத்தில்தான் ஸ்கிம்மிங் கருவி பொருத்தப்படுகிறது. அதாவது, நீங்கள் வழக்கமாக வங்கி அட்டை சொருகும் இடம் புதிதாக நீண்டு வளர்ந்ததை போன்றோ அல்லது அசாதாரணமாகவோ காட்சியளிக்கும்.

அப்படி உங்களுக்கு சந்தேகம் இருக்கும் அசாதாரணமான பகுதியை சிறிதளவு அசைத்து பார்த்தாலே அது இணைக்கப்பட்ட இடத்திலிருந்து பிரிய ஆரம்பிக்கும். அதே போன்று, நீங்கள் கடவுச்சொல் பதிவு செய்யும் இடத்திற்கு மேலே ஏதாவது புள்ளி அளவில் கேமரா தென்பட்டாலும் எச்சரிக்கையாக இருங்கள்.

சில சமயங்களில், ஏ.டி.எம் அட்டையின் கடவுச்சொல் தட்டச்சு செய்யும் பலகையின் மேலே அதே போன்ற மற்றொரு உறை ஒட்டப்பட்டு உங்களுக்கு தெரியாமலே கடவுச்சொல் பதிவுசெய்யப்படும். எனவே, நீங்கள் கடவுச்சொல் தட்டச்சு செய்யுமிடத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏதாவது தென்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.

தலைப்புச்செய்திகள்