Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

303 உறுப்பினர்களின் ஆதரவோடு முத்தலாக் மசோதா நிறைவேறியது

ஜுலை 26, 2019 01:19

புது டெல்லி : முத்தலாக் தடுப்பு மசோதா பாராளுமன்ற லோக்சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, மசோதா ராஜ்யசபாவிற்கு அனுப்பப்பட உள்ளது. 

முஸ்லிம்களில் மூன்று முறை, தலாக் கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நடைமுறை சட்டவிரோதம் என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா, பிரதமர் மோடி தலைமையிலான, முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் கணவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கப்படும். நீண்ட இழுபறிக்குப் பின், லோக்சபாவில் நிறைவேறிய இந்த மசோதா, ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக, அவசர சட்டம் இயற்றப்பட்டு, பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மசோதா நேற்று லோக்சபாவில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த மசோதாவை கொண்டு வந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,

பாலின சமத்துவத்திற்காகவும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படியும் இந்த மசோதா தேவைப்படுகிறது. 2017 ஜனவரிக்கு பிறகும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும், பல முறை முத்தலாக் சொல்லி விவகாரத்து நடந்துள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதை தொடர்ந்து அனுமதிக்க வேண்டுமா? பாகிஸ்தான் மற்றும் மலேசியா உள்ளிட்ட 20 நாடுகளில் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற இந்தியாவில் நாம் ஏன் அதனை செய்யக்கூடாது? என்றார்.

இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த, பிஜூ ஜனதா தள எம்.பி. அனுபவ் மொகந்தி, இந்த மசோதாவை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. இதில் உள்ள சில பிரச்னைகள் சரி செய்யப்பட வேண்டும் என்றார்.  ஐக்கிய ஜனதா தள எம்.பி., ராஜிவ் ரஞ்சன் சிங் பேசுகையில், இந்த மசோதா குறிப்பிட்ட மதத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். இதனால், இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றார். தொடர்ந்து அக்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து நடந்த ஓட்டெடுப்பில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 303 பேர் ஆதரவு தெரிவித்தனர். 82 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்