Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உழைப்பால் உயர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினம் இன்று

ஜுலை 27, 2019 04:46

ராமேஸ்வரம்: எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடியரசு தலைவராக உயர்ந்து, அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்த  முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 1931, அக். 15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்து திருச்சியில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். பள்ளிப்படிப்பில் சுமாரான மாணவராக இருந்தவர், விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் சென்னை எம்ஐடியில் விமானவியல் படிப்பை முடித்து தனது கல்வித் தகுதியை வளர்த்துக்கொண்டார். தொடர்ந்து ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறினார். அக்னி ஏவுகணை சோதனைக்குப்பின் சர்வதேச அளவில் அறியப்பட்ட கலாம், இந்திய விண்வெளி துறையிலும் பல்வேறு சாதனைகளை படைத்து ஏவுகணை நாயகன் என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

நாட்டில் விவசாயம், மருத்துவத்துறை வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து சிந்தித்து வந்த கலாம், 2002, ஜூலை 25ல் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார். தனது பதவிக்காலத்தில் வெளியூர் பயணங்களின்போது பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து நாட்டின் வளர்ச்சி, எதிர்கால இந்தியா குறித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த இவர் இளைஞர்களின் ரோல்மாடலாக விளங்கினார். 

நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தபோதும் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் எளிமையை கடைபிடித்து வந்ததால், ‘மக்கள் ஜனாதிபதி’ என்றே நாட்டு மக்களால் அழைக்கப்பட்டார். 2020ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மாபெரும் வல்லரசாக உருவெடுக்கும் என்று கூறி வந்த கலாம், ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின்பும் ஓய்வு எடுக்கவில்லை. நாடு முழுவதும் பயணம் செய்து மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து எதிர்கால இந்தியாவை உருவாக்க உத்வேகம் அளித்து உரையாடி வந்தார். 2015, ஜூலை 27ல் மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று உடல் நலம் பாதித்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மரணமடைந்தார்.

நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில், கலாம் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடை வளாகத்தில் அவரை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள், விஞ்ஞானிகள் பலர் பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தலைப்புச்செய்திகள்