Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீகார், அசாமில் வெள்ளம்: 204 பேர் உயிரிழப்பு

ஜுலை 28, 2019 06:07

பாட்னா : பீஹார், அசாம் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை, 204 பேர் பலியாகியுள்ளனர்; ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அண்டை நாடான, நேபாளத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நேபாள எல்லையில் அமைந்துள்ள, நம் நாட்டின் பீஹார் மாநிலத்தில், முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுவதால், 12 மாவட்டங்கள், தண்ணீரில் மூழ்கியுள்ளன. இங்கு, 80 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 123 பேர் பலியாகியுள்ளனர். 

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை, பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பீஹார் மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். பீஹாரின் தர்பங்கா மாவட்டத்தில், வெள்ளத்தில், 'டிக் டாக், வீடியோ' எடுத்தபோது பலியான இளைஞரின் உடல், நேற்று மீட்கப்பட்டது. வட கிழக்கு மாநிலமான அசாமிலும், கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 81 ஆக அதிகரித்துள்ளது. 17 மாவட்டங்களை சேர்ந்த, 20 லட்சம் பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர். சில மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நிவாரண பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு, அதிக நிதி ஒதுக்க வேண்டும் என அசாம், பீஹார் மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன.


 

தலைப்புச்செய்திகள்