Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க உதவுங்கள்: ஐநாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை

பிப்ரவரி 19, 2019 11:24

இஸ்லாமாபாத்: இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க உதவுங்கள் என ஐநாவுக்கு பாகிஸ்தான் அவசர கடிதம் எழுதி உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளபதி உள்பட 3 பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடந்த  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுமார் 16 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் ஜெய்ஷ்-இ- முகமது இயக்க மூத்த தளபதி கம்ரான் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சரணடையுங்கள், அல்லது நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள் என புல்வாமா என்கவுண்டருக்கு பிறகு இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை எச்சரித்து உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைமை காஷ்மீரில் முழுவதுமாக அழிக்கப்பட்டது. 100 மணி நேரத்தில் பழி தீர்த்து விட்டதாகவும் இந்திய ராணுவம் அறிவித்து உள்ளது. 

இந்த நிலையில் நேற்று பாகிஸ்தானிய வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியா  கெடரெருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அதில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்களை குறைக்க  உதவுங்கள் என கோரிக்கை வைத்து உள்ளார். 

அதில்  இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக  படைகளை பயன்படுத்தும் என அச்சுறுத்தல் நிலவுகிறது.  இதனால் இந்த பிராந்தியத்தில்  மோசமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.  இதனை அவசர உணர்வாக எடுத்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க உதவுங்கள் என ஐநாவுக்கு பாகிஸ்தான் அவசர கடிதம் எழுதி உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்