Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜகவை அழைக்காதது ஏன்? அதிமுகவுக்கு முத்தரசன் கேள்வி

ஜுலை 29, 2019 02:29

ஈரோடு: இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய கல்வி கொள்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம்-புதுப்பித்தல் கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. மின்சார வாகனத்தை வாங்குவதை அரசு நிர்பந்திப்பதற்காகவே இந்த முறையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு ஒதுக்கிய நிதியில் கல்வி, சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடந்த 2017-18ல் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தாததால் 28ஆயிரம் கோடி ரூபாய் திரும்பியுள்ளது. இது அரசின் நிர்வாக திறமையில்லாததை காட்டுகிறது.
வேலூரில் 3-ம் தேதி மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியை பிரச்சாரத்திற்கு அக்கட்சியினர் அழைக்கவில்லை. ஏன் அழைக்கவில்லை?

சேலம்-சென்னை 8வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பதால் அத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம். 100நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை பாதுகாக்கும் வகையில் நாகையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் 14,15,16 ம் தேதிகளில் தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்