Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவிகளை கிண்டல் செய்த 28 மாணவர்களுக்கு சிறை: பெற்றோர் தர்ணா

ஜுலை 30, 2019 03:42

திருச்சி:  திருச்சி-திண்டுக்கல் சாலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த 27ம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவிகளை ஒருதரப்பு மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை 4ம் ஆண்டு மாணவர்கள், எச்சரித்து விட்டு கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 3ம் ஆண்டு மாணவர்கள், அவர்களின் நண்பர்கள் சிலருடன் மைதானத்திற்கு சென்றனர். அங்கு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 4ம் ஆண்டு மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மோதலாக மாறியது. இதில் 5 மாணவர்களின் மண்டை உடைந்தது.  தொடர்ந்து இருதரப்பிலும் தகராறில் ஈடுபட்ட 28 மாணவர்களை பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.  இதையடுத்து கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து  சீனியர் மாணவர்கள் 11 பேர், ஜூனியர் மாணவர்கள் 17 பேரை போலீசார் கைது செய்தனர். 

28 பேரையும் நேற்றுமுன்தினம் மாலை ஜே.எம்.3 மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். 28 பேரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் சோமசுந்தரம் உத்தரவிட்டதின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில்  நேற்று கல்லூரிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் உங்களை நம்பி தான் படிக்க அனுப்பி வைத்தோம். இப்போது அவர்கள் சிறையில் தள்ளப்பட்டிருப்பதால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது என கேட்டு கல்லூரி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட 28 பேரில் 3ம் ஆண்டு மாணவர் மற்றும் 4ம் ஆண்டு மாணவர் என 2 பேருக்கு ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் 2 பேருக்கும் ஜாமீன் அளித்து மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்