Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை திருப்பி தந்த கேரள அரசு: ஐகோர்ட் அதிருப்தி

ஜுலை 30, 2019 03:53

திருவனந்தபுரம்: கொச்சியில் நடிகர் மோகன்லாலின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 2 ஜோடி யானை தந்தங்களை மீணடும் அவரிடமே திருப்பி கொடுத்த கேரள அரசின் செயலுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் சென்னையில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கொச்சி வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இதை வருமான வரித்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக கோடநாடு வனத்துறையினர் மோகன்லாலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே யானை தந்தங்களை திருப்பி கேட்டு அப்போதைய வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் தந்தங்களை தன்னிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுத்தார். வனத்துறை சட்டப்படி யானை தந்தங்களை வீடுகளில் வைத்திருக்கக்கூடாது. ஆனால் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து அன்றைய கேரள அரசு தந்தங்களை மோகன்லாலிடம் திருப்பி கொடுத்தது. இதை எதிர்த்து ஏலூரைச் சேர்ந்த பவுலோஸ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் சட்டத்தை மீறி மோகன்லாலிடம் திருப்பி கொடுக்கப்பட்ட தந்தங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று கேரள தலைமை நீதிபதி ரிஷிகேஸ் ராய் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மோகன்லாலிடம் சட்டத்தை மீறி யானை தந்தங்களை திருப்பி கொடுத்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர். சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் வழக்கை அரசு முடிவிற்கு கொண்டு வராதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அரசுக்கு சட்ட ரீதியாக செயல்பட மட்டுமே உரிமை உண்டு என்றும் வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன் தந்தங்களை மோகன்லாலிடம் திருப்பி கொடுத்தது தவறு என்றும் கூறினர். 

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்ளை 3 வாரங்களில் தாக்கல் செய்ய வழக்கு நடைபெறும் பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்