Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உன்னாவ் பலாத்காரம்: பிரியங்கா காந்தி தாக்கு

ஜுலை 30, 2019 08:21

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், உன்னாவ் நகரில் பெண் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் போன்றோருக்கெல்லாம் அரசியல் பாதுகாப்பு தேவையா என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் பங்கர்மாவு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். 4-வது முறை எம்எல்ஏவாக இருக்கும் குல்தீப் சிங் செங்கார் கடந்த 2017-ம் ஆண்டு, தனது வீட்டில் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

உன்னாவ் நகரில் உள்ள மகி போலீஸ் நிலையப்பகுதியைச் சேர்ந்த அந்த பாதிக்கப்பட்ட பெண், எம்எல்ஏ செங்கார் மீது பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முதல்வர் ஆதித்யநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளிக்க முயன்றபோதுதான் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவியது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி செங்காரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண், அவரின் உறவினர் இன்னும் சிலர் காரில் தங்களுடைய வழக்கறிஞருடன் ரேபரேலி சிறையில் இருக்கும் உறவினரைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அப்போது சாலையில் இவர்கள் சென்ற காரின் மீது ஒரு லாரி  பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் படுகாயமடைந்தார், உடன் சென்ற இரு பெண்கள் பலியானார்கள், வழக்கறிஞர் ஒருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார். இது விபத்து என்று கூறப்பட்டாலும், இது விபத்து அல்ல, சதி இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ட்விட்டரில் உன்னாவ் பலாத்காரம் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், " பலாத்காரத்துக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட பெண் கைவிடப்பட்ட நிலையில் உயிருக்குத் தனியாக போராடிக்கொண்டிருக்கும்போது, குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குல்தீப் செங்கார் போன்றோருக்கு எதற்காக அரசியல் பாதுகாப்பும், போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கிறார்கள். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள் என்று முதல்தகவல் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட செய்யப்பட்ட விபத்து என்றுகூட குறிப்பிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.மேலும், பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் தகவல் அறிக்கையின் நகலையும் இணைத்துப் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்