Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

ஜுலை 31, 2019 03:26

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் கபே காபி டே எனும் பிரபல தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார்.

எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், கபே காபி டே ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் சித்தார்த்தா தனது காரில் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்றார். காரை டிரைவர் பசவராஜ் ஓட்டினார். சக்லேஷ்புரா அருகே சென்றபோது டிரைவரிடம், மங்களூருவுக்கு செல்லும்படி சித்தார்த்தா கூறினார். அதன்படி டிரைவர் காரை மங்களூருவுக்கு ஓட்டிச் சென்றார்.

இரவு 7.15 மணிக்கு மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தும்படி கூறினார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த்தா தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் காருக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பசவராஜ், சித்தார்த் மாயமாகிவிட்டதாக கூறி கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

சித்தார்த் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் போலீசார் தேடிப் பார்த்தனர். இரவு முழுவதும் தேடியும் சித்தார்த் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சித்தார்த் மாயமான விஷயம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாயமான கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல கபே காபி டே ஓட்டல் அதிபருமான சித்தார்த்தாவின் உடல் நீண்ட தேடுதலுக்கு பின்னர் நேத்ராவதி ஆற்றில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மரணம் உறுதியானது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்