Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை தொழில் அதிபர் வீட்டில் ரூ.29 லட்சம் கொள்ளை

ஜுலை 31, 2019 03:45

சென்னை: மதுரவாயல் ஆலப்பாக்கம் ஆண்டாள் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சத்திய நாராயணன் (42). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலையில் வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த ரூ.29 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. சத்தியநாராயணன் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் வீட்டிற்குள் புகுந்துள்ளது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் - நகையை அள்ளிச் சென்றுள்ளனர்.

மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

தொழில் ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதா? அவர் தொழில் சார்ந்த யாரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை வீட்டில் வைத்து சென்றது ஏன்? எதற்காக இந்த பணம் வைக்கப்பட்டது, யாருக்கு கொடுக்க வைத்திருந்தார் என்றும் சத்தியநாராயணனிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தலைப்புச்செய்திகள்