Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சித்தார்த்தா கட்டமைத்த காஃபி சாம்ராஜ்யம் சரிந்தது எப்படி?

ஜுலை 31, 2019 06:02

ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்.  இப்படி உருக்கமான கடிதத்தை எழுதி வைத்து விட்டு மாயமான காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அவர் கட்டமைத்த காஃபி சாம்ராஜ்யம் சரிந்தது எப்படி?

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா. மங்களூரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரது குடும்பமே 100 ஆண்டுகளுக்கும் மேலாக காஃபி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. அதனால், காஃபி மீதான காதலால் கடந்த 1993-ம் ஆண்டு காஃபி டே நிறுவனத்தை தொடங்கினார் சித்தார்த்தா. 

இவரின் தொழில்நேர்த்தியால் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்பு பெருக ஆரம்பித்தது. மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக பரந்து விரியத் தொடங்கியது காஃபி டே.  காலப்போக்கில் இந்தியா மட்டுமல்லாமல் காஃபி டே நிறுவன கிளைகள் வெளிநாடுகளிலும் தொடங்கப்பட்டன. ஆஸ்திரேலியா, மலேசியா, நேபாளம், எகிப்து உள்ளிட்ட நாடுகளில்  காஃபி டே நிறுவன கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் மட்டும் அந்த நிறுவனத்துக்கு சுமார் 1,750 கிளைகள் உள்ளன. 

இது மட்டுமில்லாமல் பல்வேறு மென்பொருள் நிறுவனங்களிலும் ஏராளமான முதலீடுகளை சித்தார்த்தா செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் காஃபி டே நிறுவனம் செயல்பட்டு வந்தாலும், செலவுக்கு ஏற்ப வருமானம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 30,000 பேருக்கு நேரடியாக பணி வழங்கிய காஃபி டே நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கியதாகவும், இதனால் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் சித்தார்த்தா நிதிநெருக்கடியில் இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

லாபம் குறைய தொடங்கியதால், காபி ஃடே நிறுவனம் மெல்ல மெல்ல கடனில் மூழ்க தொடங்கியது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி அந்நிறுவனத்தின் மொத்தக் கடன் 6 ஆயிரத்து 547 கோடி ரூபாய். இது அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பான 2 ஆயிரத்து 529 கோடியில் இருந்து சுமார் இரண்டரை மடங்கு அதிகம். இந்நிலையில் மாயமான சித்தார்த்தா, நிறுவன தொழிலாளர்களுக்கு அண்மையில் எழுதிய உருக்கமான கடிதம் வெளியாகியிருக்கிறது. 
 
ஒரு தொழிலதிபராக தாம் தோற்றுவிட்டதாகவும், லாபகரமான தொழில் முன் மாதிரியை உருவாக்க தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தம்மை நம்பியிருந்தவர்களை கைவிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள சித்தார்த்தா, வருமான வரித் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவர் தமக்கு பெரும் நெருக்கடியை கொடுத்ததாகவும் கடிதத்தில் கூறியள்ளார். தமது நிறுவன பங்குகள் நியாயமற்ற முறையில் முடக்கப்பட்டதால், நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதாக குறிப்பிட்டுள்ள சித்தார்த்தா, கடன் கொடுத்த நெருங்கிய நண்பர்களே தமக்கு நெருக்கடி கொடுத்துவிட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 
  
இந்தியா முதல் உலக நாடுகள் வரை கொடிகட்ட பறந்த காஃபி டே நிறுவனம், இன்று வீழ்ச்சி அடைந்திருப்பது பிற தொழிலதிபர்களையும் கலக்கம் அடைய செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்