Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

ஆகஸ்டு 01, 2019 05:08

புதுடெல்லி: முத்தலாக் தடை சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து சட்டமானது.

இந்த மசோதாவின்படி முஸ்லிம் கணவர்கள், தங்களின் மனைவிக்கு உடனடியாக முத்தலாக் கூறியதாக மனைவி புகார் அளித்தால், அது குற்றமாகும், அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். உடனடியாக 3 முறை  தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை கிரிமினல் குற்றமாகக் கருதும் மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. 

முஸ்லிம் ஆண்கள் தங்கள் உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.அதன் பின் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, கடந்த வாரம் நிறைவேறியது.  

இந்நிலையில், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா எனப்படும் முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்  பிரசாத் தாக்கல் செய்தார்.  முத்தலாக் தடை மசோதா மீது  நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை 121 என்ற நிலை மாறி, அதற்கும் குறைவான எம்.பி.க்கள் பலம் இருந்தாலே பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. வாக்கெடுப்பின் இறுதியில், 99 எம்.பி.க்களின் ஆதரவுடன் முத்தலாக் மசோதா நிறைவேறியது.  அதை எதிர்த்து 84 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர்.

மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியதையடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து, முத்தலாக் சொல்வது கிரிமினல் குற்றமாக்கப்பட்டு சட்டமாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்