Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. முத்தலாக் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது: மு.க.ஸ்டாலின்

ஆகஸ்டு 02, 2019 04:05

வேலூர்: வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இஸ்லாமிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் முன்னிலையில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்னவென்று தயவுசெய்து நினைத்து பாருங்கள். முத்தலாக் என்ற ஒரு கொடுமையான மசோதாவைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்திலும் அதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றி முடித்த நேற்றைய தினம் ஜனாதிபதியும் கையெழுத்துப் போட்டிருக்கக்கூடிய ஒரு அக்கிரமம் நடந்து முடிந்திருக்கின்றது. அதை நாம் கடுமையாக தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளும் அதனை எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

நாம் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார்கள். 5 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அப்பொழுது இந்த முத்தலாக் மசோதா வரக்கூடாது. வந்தால் எங்கள் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார்.

ஆனால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனியின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் இந்த மசோதாவை ஆதரித்து பேசி இருக்கின்றார்.

இவர் பேசியதும் அடுத்த நாள் அ.தி.மு.க. அமைச்சர்களுள் முக்கியமான ஒருவர் என்ன சொல்கின்றார் என்றால் ‘நாக்கு தவறி’ பேசிவிட்டார் என்று சொல்கின்றார். ஏதாவது தேதியை மாற்றி பேசினால், இல்லை பெயரை ஏதாவது மாற்றி பேசினால் அவ்வாறு சொல்லலாம். ஆனால், இந்த சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து ஒரு மிகப்பெரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். அது நாக்கு தவறுதலா?. அதைத்தான் தயவுசெய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே இரட்டைவேடம் போடுகின்றது என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்