Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவின் பால் விலை உயர்கிறது!

ஆகஸ்டு 02, 2019 05:40

சென்னை: அரசின் ஆவின் நிறுவனம் தமிழகத்தில் பால் விற்பனையில் செயல்பட்டு வருகிறது. தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. தனியார் பால் விலையை விட ஆவின் பால் தரமாகவும், குறைவாகவும் இருப்பதால் பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் பால் விலை கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன் பின்னர் 5 வருடமாக பால் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளது. கால்நடை தீவனம் விலை அதிகரித்துள்ளதால் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுவருவதாக பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக “வைக்கோல்” விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2014-ல் 25 கிலோ வைக்கோல் ரூ.120 ஆக இருந்தது. அவற்றின் விலை தற்போது ரூ.250 ஆக அதிகரித்து இருப்பதாக தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே இத்தொழில் செய்யும் விவசாயிகள் பிழைப்பு நடத்த முடியும். இல்லையெனில் இத்தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளார்.இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பால் கொள்முதல் கூட்டுறவு சங்க அதிகாரி அழைத்து விலையை உயர்த்தவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். வேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தும் போது விற்பனை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் எந்த அளவிற்கு உயர்த்துவது என்பது குறித்து துறையின் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:- பால் உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ரூ27-ல் இருந்து ரூ.42 ஆக 15 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை ரூ.29-ல் இருந்து ரூ.50 ஆக 21 ரூபாய் உயர்த்தவும் வேண்டும் என்று கூறியுள்ளோம்.

அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்து பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாக முதல்- அமைச்சர் கூறியுள்ளார். இதனால் ஆவின் பால் விலை உயர்வு ரூ.10 முதல் ரூ.15 வரை இருக்க வாய்ப்பு உள்ளது. வேலூர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பததால் தேர்தல் முடிந்த பின்னர் விலை உயர்வு அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்