Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1952ம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய சாதனை: மக்களவையில் மட்டும் இதுவரை 30 மசோதாக்கள் நிறைவேற்றம்

ஆகஸ்டு 04, 2019 05:01

டெல்லி: 1952ம் ஆண்டுக்குப் பின் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய சாதனை நடந்துள்ளது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைத்த பிறகு, நாடாளுமனறத்தின் முதல் கூட்டத் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இன்றுடன் முடிய இருந்தது. ஆனால், இந்த தொடரை மேலும் சில நாட்கள் நீட்டிக்க மத்திய அரசு விரும்பியது. இது குறித்து நாடாளுமன்ற அலுவல் குழு ஆலோசனை நடத்தியது. எதிர்க்கட்சிகளுடனும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 7ம் தேதி வரை கூட்டத் தொடரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டத் தொடரை ஆகஸ்ட் 7ம் தேதி வரை, 13 நாட்களுக்கு  நீட்டிக்கும் முடிவை அவையில் தெரிவித்தார்.   

இதற்கிடையே, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் மட்டும் இதுவரை 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வேலை நாட்கள் எஞ்சிய நிலையில், இன்னும் பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1952-ம் ஆண்டுக்குப் பின் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனையாக இது கருதப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா, தீவிரவாத செயல்கள் தடுப்பு மசோதா போன்ற பல்வேறு முக்கிய மசோதாக்கள் கடந்த சில நாட்களில் நிறைவேறியுள்ளன. 1952-ம் ஆண்டு 64 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமாக இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதாக கூறிய அவர், கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாட்டு நலனை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.  
 

தலைப்புச்செய்திகள்