Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூரில் நேற்றுடன் ஓய்ந்தது பிரசாரம்: நாளை வாக்குப்பதிவு

ஆகஸ்டு 04, 2019 06:25

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் இன்று மாலைக்குள் நிறைவடையும் என மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

பணப்பட்டுவாடா புகாரால் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். பிரசாரத்தின் நிறைவு நாளான நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் திறந்வெளி வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன, வேலூர் அதிமுகவின் எஃகு கோட்டை என்பது வரும் தேர்தலில் நிரூபிக்கப்படும் என்றார்.

மேலும், ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொரப்பாடி முதல் சத்துவாச்சாரி வரை பிரம்மாண்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, காலையில் வேலூர் சத்துவாச்சேரி, வேலப்பாடி பகுதிகளில் அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

பின்னர் வேலூர் மண்டித்தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, காதர் மொய்தீன், முத்தரசன், டி.கே.ரங்கராஜன், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பணத்தால் வென்றுவிடலாம் என்ற ஆளும் கட்சியின் எண்ணம் நிறைவேறாது என்றார்.

இறுதியாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய விடவில்லை என்றார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வாக்குப்பதிவுக்கான பணிகள் இன்று மாலைக்குள் நிறைவடையும் என்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் தெரிவித்தார். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்