Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100 ஆண்டுகளில் 1300 மடங்கு உயர்ந்த தங்கத்தின் விலை

ஆகஸ்டு 04, 2019 01:18

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த நூறு வருடங்களில் இருந்த தங்கத்தின் விலை நிலவரம் என்ன?, விலை உயர்வதற்கான காரணிகள் என்ன? சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1920-ம் ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் 21 ரூபாய் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அது தான் உண்மை. நூறு ஆண்டுகளில் சுமார் ஆயிரத்து முன்னூறு மடங்கு உயர்ந்துள்ளது 1920 -ல் இருந்து 1960 வரையிலான 40 ஆண்டு காலகட்டத்தில் தங்கத்தின் விலை வெறும் 80 ரூபாய் மட்டுமே உயர்ந்தது. அதன்பிறகு தான் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியது.

அடுத்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 20 மடங்கு உயர்ந்து 1987 ஆம் ஆண்டு ஒரு சவரன் இரண்டாயிரத்து பதினாறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. படிப்படியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 2008 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாயை தாண்டியது. தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது இந்த பதினோரு ஆண்டுகளில்தான். 2008-ல் 10,040 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது சுமார் 17 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 27 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. தனிநபர்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள் மற்றும் அரசுகள் கூட தங்கத்தின் மீதான முதலீட்டில் ஆர்வம் காட்டுகின்றன.. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனிமனித வருமானம் அதிகரித்து வருவதால் தங்கத்தின் மீதான சில்லறை முதலீடு அதிகரித்துள்ளது.  

பல அரசாங்கங்கள் கூட தங்கள் நாட்டு மத்திய வங்கி மூலம் தங்கத்தை பெருமளவு சேமித்து வைக்கின்றன. World Gold Council தகவலின் படி 2018 வரை பல்வேறு நாட்டு அரசுகள் சுமார் 450 டன் வரை தங்கத்தை சேமித்து வைத்துள்ளன. இப்படி தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருவதால் அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. 
 
உலக அளவில் தற்போதைய தங்கத்தின் தேவையை விட ஆயிரம் டன் தங்கம் குறைவாக உள்ளது என்கிறது ஒரு புள்ளி விபரம். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவை பொருத்தவரை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்து கொண்டே வந்தாலும், தங்கம் வாங்கும் ஆர்வம் குறையவில்லை.  
 

தலைப்புச்செய்திகள்