Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 72 சதவீதம் வாக்குப்பதிவு: 9-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை

ஆகஸ்டு 06, 2019 03:18

வேலூர்: தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் காரணமாக வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். அவர்கள் வாக்களிக்க தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் ஆளாக தனது வாக்கை செலுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை செலுத்தினர்.

வேலூர் சட்டமன்ற தொகுதி கொணவட்டம் அரசுப்பள்ளி மற்றும் 5 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் பெண்கள் மட்டும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி அறையின் சுவர்கள், தரைவிரிப்பு, பலூன்கள், திரைவிரிப்பு என அனைத்தும் ‘பிங்க்’ மயமாக காட்சியளித்தது. இங்கு வாக்குச்சாவடி அலுவலர்களாக பெண்கள் மட்டும் பணிபுரிந்தனர்.

அதேபோன்று 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியின் நுழைவு பகுதியில் வாழைமர தோரணம் கட்டப்பட்டிருந்தது. வாக்குச்சாவடியில் குளிர்சாதன வசதி, வாக்காளர்கள் அமர சோபா வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் பசுமை தமிழகத்தை வலியுறுத்தும் வகையில் விதைப்பந்து வழங்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டிருந்தன. முதல் முறையாக வாக்களிக்கும் இளம்வாக்காளர்களை கவர இந்த மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

மாலை 6 மணி நிலவரப்படி வேலூர் தொகுதியில் 67.5 சதவீதமும், அணைக்கட்டு தொகுதியில் 75 சதவீதமும், கே.வி.குப்பம் தொகுதியில் 72 சதவீதமும், குடியாத்தம் தொகுதியில் 77 சதவீதமும், வாணியம்பாடி தொகுதியில் 72 சதவீதமும், ஆம்பூர் தொகுதியில் 70 சதவீதமும் என வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 72 சதவீதம் வாக்குப்பதிவானது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்குச்சாவடி மைய மேற்பார்வையாளர் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டன. பின்னர் அவை வேனில், துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அறைகளில் பாதுகாப்புடன் அடுக்கிவைக்கப்பட்டன.

அவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 9-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்