Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதலாம் ஆண்டு நினைவு தினம்: கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி நாளை திறந்து வைக்கிறார்

ஆகஸ்டு 06, 2019 03:26

சென்னை:தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 94. அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி, சிலை திறப்பு விழா, பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள, அண்ணா சிலை அருகில் இருந்து, நாளை காலை 8 மணியளவில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற உள்ளது. பேரணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

பின்னர், மாலை 5 மணியளவில் தி.மு.க. நாளேடான ‘முரசொலி’ அலுவலக வளாகத்தில், அமர்ந்த நிலையில் எழுத்தோவியம் தீட்டுவது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும், கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கும் கி.வீரமணி தலைமை தாங்கி தலைமை உரையாற்றுகிறார். ‘முரசொலி’ ஆசிரியர் செல்வம் வரவேற்புரை வழங்குகிறார். மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். விழாவின் நிறைவாக, மு.க.ஸ்டாலின் நன்றியுரை ஆற்றுகிறார்.

இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற கடிதம் வடிவில் தொண்டர்களுக்கு உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஆண்டு முழுவதும் நமது நினைவுகளில் நின்று, நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்டு 7-ந் தேதி தி.மு.க. தொண்டர்கள் சென்னை நோக்கித் திரண்டிட அழைக்கிறேன்! கடற்கரையில் ஓய்வெடுக்கும் தலைவர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி, பொங்கி வரும் கண்ணீருக்கு அணையிட்டு, அமைதிப்பேரணியை அனைவரும் இணைந்து நடத்திடுவோம்! இதயம் நிறைந்த இனிய தலைவரின் ஓய்விடத்தில் மலர் தூவி, நினைவுகளால் வணங்கிடுவோம். அவர் வழியில் தி.மு.க. எனும் பேரியக்கத்தைக் காத்து, இனி எதிர்கொள்ள இருக்கும் களங்கள் அனைத்திலும் வெற்றியினைக் குவித்து அவர்தம் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்; வாரீர்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்