Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: தஞ்சை, நாகை, திருவாரூரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

ஆகஸ்டு 06, 2019 05:51

தஞ்சாவூர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி ஐ.ஜி.வரதராஜூலு உத்தரவின் பேரில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 3 தனிக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் தஞ்சை பெரிய கோவில், புதிய, பழைய பஸ் நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலாத்தலமான தஞ்சை அரண்மனை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதலே முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனையையும் நடத்தி வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று காலை வந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளிநாட்டினரை போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மெட்டல் டிடெக்டர் மூலம் உடமைகளை சோதித்தனர். மேலும் பெரிய கோவில் வளாகத்தில் இன்று காலை போலீஸ் மோப்ப நாய் சீசர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான முத்துப்பேட்டையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் இன்று காலை சென்று போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். ஏதேனும் சம்பவம் நடைபெறாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை கூறினார்.

இதேபோல் திருவாரூர், நன்னிலம், முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி பகுதிகளில் 5 டி.எஸ்.பிக்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா மற்றும் கோவில் பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில் நாகை, சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், பொறையாறு ஆகிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்