Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ரூ.10 கட்டணத்தில் வாடகை கார் வசதி

ஆகஸ்டு 06, 2019 12:01

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 45 கி.மீட்டர் தூரத்துக்கு வழித்தடபாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளை கவரும் விதமாக மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 6 முதல் 8 கி.மீட்டர் தூரத்துக்கு செல்லும் வகையில் வாடகை கார் (கேப்) வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.10 கட்டணத்தில் இந்த வசதியை மெட்ரோ ரெயில் பயணிகள் எளிதில் பெறலாம். மெட்ரோ ரெயில் பயண அட்டை மூலம் பணம் செலுத்தலாம். ‘மொபைல் ஆப்’ மூலம் வாடகை கார்களை ‘புக்’ செய்யலாம். செல்லும் இடம், நேரம், சீட் வசதியை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

வாடகை கார் வசதியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த கார்கள் மின்சார பேட்டரி மூலம் இயங்கும். மெட்ரோ நிர்வாகமும் பெங்களூரு தனியார் நிறுவனமும் இணைந்து இந்த கார் வசதியை மெட்ரோ பயணிகளுக்கு வழங்குகிறது.

மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து வாடகை கார் வசதி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.10 கட்டணத்தில் 8 கி.மீட்டர் தூரம் வரை இந்த வாடகை காரில் குறிப்பிட்ட இடங்களுக்கு பயணம் செய்யலாம். ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் குறைந்த பட்சம் 2 வாடகை கார்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் இன்னும் 3 மாதங்களில் விரிவுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்