Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உங்களுக்கு முதுகெலும்பு இல்லை, அமருங்கள்: அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை விமர்சித்த திமுக எம்பி டி.ஆர். பாலு

ஆகஸ்டு 06, 2019 12:37

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 3ஏ  நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்றது

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் தனது பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட அதிமுக எம்.பி.ரவீந்திரநாத்தை கிண்டல் செய்து அமரவைத்தார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு. அவரின் பேச்சின் இடையே அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குறுக்கிட முயற்சி செய்தார். அப்போது டி.ஆர்.பாலு சற்று ஆவேசமாக கையை நீட்டி ரவீந்திரநாத்தை அமரும்படி சமிக்ஞை காட்டியதோடு  உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; அமருங்கள். இங்கே முதுகெலும்பு உள்ள நபர்களைத்தான் சபாநாயகர் பேச அனுமதித்தார் என்று கூறினார்.

கனிமொழி எம்.பி.யும் எழுந்து ரவீந்திரன் ஏன் குறுக்கிடுகிறார் என்று கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர், உறுப்பினரை மிரட்டும் வகையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.அதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு,  நான் யாரையும் மிரட்டவில்லை. எனக்கு முதுகெலும்பு இருப்பதால் என்னை பேச அனுமதித்தீர்கள். சிலருக்கு முதுகெலும்பு இல்லை. அதனால் நான் அவர்களைப் பேசக் கூடாது என்றேன்.

அந்தக் கட்சியில்  எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறையவே கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஏன், ரவியிடம் இருந்தும் கூட நான் நிறைய விஷயங்களை கற்க வேண்டியிருக்கிறது என்றார். அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை முதுகெலும்பில்லாதவர் என பாலு விமர்சித்தபோது திமுக எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி ஆராவாரம் செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்