Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன்: கண் கலங்கிய வைகோ

ஆகஸ்டு 07, 2019 02:25

சென்னை: முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மெரினாவில் அவரது நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், பெரியாரின் அலுவலகத்தில் வளர்ந்து, அண்ணாவின் இளவளாக அவருடன் வளர்ந்து, பராசக்தி முதல் திரும்பி பார் வரை பல்வேறு திரைப்படங்களின் மூலம் கோடிக்கணக்கான மக்களை திராவிட இயக்கத்தை நோக்கி திரும்பியவர் கலைஞர். 

அவர்தான் எம்ஜிஆரை அரசியலுக்கு கொண்டு வந்தவர். திமுகவை அண்ணாவின் பார்வையில் கட்டிக்காத்து, வளர்த்து, அண்ணா மறைந்த பின்பும் திமுகவை வலுவாக்கியவர். திமுகவை எஃகு கோட்டையாக்கி காத்தவர் கலைஞர். நெருக்கடி நிலையிலும் கூட கட்சியை மிகவும் வலுவாக கட்டிக்காத்தவர். பல போராட்டங்களுக்கு இடையிலும் கட்சியை வளர்த்து எடுத்தவர். துண்டு பிரசுரம் கொடுத்து கூட இவர் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

அண்ணாவிடம் இவர் படித்த அரசியல் பாடம் மிக சிறப்பானது. இந்தியாவிற்கே வழிகாட்டிய தலைவர். தமிழ் மொழி செம்மொழி ஆக காரணமாக இருந்தவர். அவர் மறைந்து ஒருவருடம் ஆகிறது. அவர் இறக்கும் முன் என்னை பார்த்ததும், அவரின் கண்கள் பணித்தது. கோடிக்கணக்கான இதயங்களை திமுகவை நோக்கி இழுத்தவர் கலைஞர். கலைஞருக்கு நான் எப்படி துணையாக பலமாக நின்றேனோ, அப்படித்தான் நான் ஸ்டாலினுக்கும் நிற்பேன். கலைஞருக்கு நான் இந்த வாக்கை கொடுத்து இருக்கிறேன். அவர் இறக்கும் முன் அவருக்கு இந்த வாக்கை கொடுத்தேன். அதை எப்போதும் காப்பாற்றுவேன் என வைகோ உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்