Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் மண்ணையும், வங்காள மண்ணையும் தியாகம் செய்ய முடியாது - மம்தா பானர்ஜி பேச்சு

ஆகஸ்டு 08, 2019 03:46

சென்னை:சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் உரையை தொடங்கி, பேசியதாவது:-

கருணாநிதி இந்திய தாயின் தலைமகன்களில் ஒருவர். இந்திய அரசியலில் அவர் பெரிய தலைவர். அவருக்கு தலை வணங்குகிறேன். கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது. அவருடைய செயல்பாடுகளால், நோக்கம், திட்டங்களால் கருணாநிதி எப்போதும் நம்முடைய நினைவுகளில் இருந்து நீங்காதவர். கருணாநிதியை வீட்டில் இருந்து போலீசார் கொடூரமாக இழுத்துச்சென்ற காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

எப்போது என்னுடைய நினைவுகளில் கருணாநிதி தோன்றுகிறாரோ, அப்போதெல்லாம் அந்த காட்சி தான் என்னுடைய நெஞ்சில் முள் போன்று குத்திக்கொண்டே இருக்கும். மு.க.ஸ்டாலின் என்ற பெயரே புரட்சிகரமானது. மு.க.ஸ்டாலின் அநீதிக்கு எதிராக போராடி வருகிறார். கருணாநிதி மறைந்து ஒரு வருடம் ஆனபோதிலும், நம்முடைய நெஞ்சங்களில் அவர் இன்னமும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறார். தாய்மொழிக்காக போராட கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி.

கருணாநிதி 13 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகளுக்காக கருணாநிதி போராடினார். குறிப்பாக கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடினார். கருணாநிதி தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே போராடினார். மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., இந்த மண்ணின் மைந்தரான கருணாநிதிக்கு மரியாதை கொடுக்கிறோம். நாம் அவர்களை ஒருபோதும் மறக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள். வாழ்க்கை முழுவதும் போராடியதால், மக்கள் அவர்களை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி கூட்டாட்சி கட்டமைப்புக்காக போராடியவர். மாநில சுயாட்சிக்காக அவர் எப்போதுமே போராட்டங்களை நடத்தியவர். நான் ஒரு இந்தியன். ஆனால் ஒரு மாநிலத்தில் பிறந்தவள். மு.க.ஸ்டாலின் இந்தியன் ஆனாலும், தமிழகத்தில் பிறந்தவர். நாம் இந்தியர்கள் என்றாலும் தாய்மொழி, தனித்துவமான அடையாளம் நமக்கு இருக்கிறது.

ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் இருக்கிறது. தமிழர்கள் துணிவு மிக்கவர்கள், புலியை போன்று வீரம் செறிந்தவர்கள். தங்கள் மாநிலத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். அதற்காக நான் உங்களை தலை வணங்குகிறேன்.

காஷ்மீர் மாநில அரசியல் கட்சி தலைவர்களை பா.ஜ.க. வீட்டு சிறையில் வைத்திருக்கிறது. இதே போன்று தமிழகத்திலும் அவர்கள் செய்ய நினைப்பார்கள். தமிழக மக்களின் விருப்பம் இல்லாமல் இதனை செய்ய துடிப்பார்கள். நாம் இதனை எதிர்க்க வேண்டும். தமிழகத்திலும், மேற்கு வங்காளத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் நாம் ஒன்றாக வெற்றியை பெற்று, மக்களுக்கு பரிசாக அளிக்க வேண்டும்.

தலைப்புச்செய்திகள்