Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பதவி விலக எம்.பி.,க்களுக்கு மெகபூபா உத்தரவு

ஆகஸ்டு 08, 2019 11:23

புதுடில்லி: மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்களை பதவி விலக வேண்டும். இல்லையென்றால், கட்சியிலிருந்து நீக்க நேரிடும் என அக்கட்சி தலைவர் மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய தலைவர்களான ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கு ராஜ்யசபாவில் இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். பதவிவிலகும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக, முப்திக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், மெகபூபா, வீட்டில் இருந்து விருந்தினர் மாளிகையில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர், தனது கட்சி எம்.பி.,க்களுக்கு பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மறுத்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மிர் முகமது பயாஸ் மற்றும் நஜீர் அகமது ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். காஷ்மீர் மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட உடனே, அதனை கிழித்தனர்.

பதவி விலகுவது தொடர்பாக பயாஸ் கூறுகையில், நாங்கள் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இது குறித்து விவாதிக்க மேலிட தலைவர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். ஆனால், தொலைதொடர்பு சாதனங்கள் செயல்படாததால், யாருடனும் ஆலோசனை நடத்த முடியவில்லை. அவர்களுடன் பேசி எங்களது முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்

கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு, பாஜ., ஆதரவுடன் மெகபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், பா.ஜ., ஆதரவை விலக்கி கொண்டதால், மெகபூபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அது முதல் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.


 

தலைப்புச்செய்திகள்