Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார்லிமென்டுக்கு புதிய கட்டடம்: சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

ஆகஸ்டு 11, 2019 04:58

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவது தொடர்பாக, பல்வேறு சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும், என்று, லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா தெரிவித்தார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பார்லிமென்ட் வளாகம், பிரமாண்டமாகவும், அனைவரையும் கவரக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பது, அனைவரின் ஆவலாக உள்ளது.

இதையடுத்து, பார்லிமென்ட்டுக்கு புதிய கட்டடம் அவசியம் என்ற எண்ணம் உருவாகி உள்ளது. இது குறித்து, பார்லிமென்ட் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளை கேட்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும். கூடவே, தற்போதைய பார்லிமென்ட் கட்டடமும் புதுப்பிக்கப்படும். நடந்து முடிந்த லோக்சபா கூட்டத் தொடர், ஒரு முறை கூட, ஒத்திவைக்கப்படாமல், திட்டமிடப்பட்டதை விட, 72 மணி நேரம் கூடுதலாக நடந்து முடிந்துள்ளது.

இதைப் போலவே, சட்டசபை கூட்டத் தொடர்களையும், ஆக்கப்பூர்வமாக நடத்துவது குறித்து விவாதிக்க, அனைத்து மாநில சட்டசபை சபாநாயகர் கூட்டத்துக்கு, விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், சபையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்து, உறுப்பினர்களுக்கு விரிவாகவும், விபரமாகவும் எடுத்துரைக்க, நிபுணர்கள் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்