Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விக்ரம் சாராபாயின் 100வது பிறந்தநாள்: டூடுளை வெளியிட்டு கவுரவித்த கூகுள்

ஆகஸ்டு 12, 2019 03:24

அகமதாபாத்: விக்ரம் அம்பாலால் சாராபாய் கடந்த 1919ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அகமதாபாத்தில் பிறந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர், தொழிலதிபராக வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் வாழ்ந்தார். 

மாறாக, விக்ரமின் ஆர்வம் முழுவதும் இயற்பியலின் மீதே இருந்தது. இங்கிலாந்தில் இயற்பியல் ஆராய்ச்சியை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை கடந்த 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி நிறுவினார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை விண்ணில் செலுத்த முதல் முக்கிய காரணமே விக்ரம்தான். எஸ்.ஐ.டி.இ எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முறை’ மூலம் 24,000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை வழங்க உதவினார். 

இன்று சர்வதேச அளவில் விஞ்ஞானிகளுக்கு போட்டியாக திகழும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கியவர் விக்ரம் சாராபாய். பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை பெற்ற இவர், கடந்த 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி உயிரிழந்தார்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனப்போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100வது பிறந்தநாளான இன்று, அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுளை வெளியிட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்