Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள மழைக்கு பலி 73 ஆக உயர்வு

ஆகஸ்டு 12, 2019 04:10

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சுமார் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 73 பேர் பலியாகியிருப்பதாக அஞ்சப்படுகிறது. மலப்புரம், வயநாடு உட்பட 8 மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.  மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. 

மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலச்சரிவில் 63 பேர் சிக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 50 ேபர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு ஒரு வீட்டில் தங்கியிருந்த விக்டர் என்பவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இவரது மகள் அலீனா மண்ணில் புதையுண்டார். நேற்று மீட்பு படையினர் வருவதற்கு முன்பே அவர் தனியாக முயற்சித்து அலீனா உடல் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்தார். பின்னர் மீட்பு படை உதவியுடன் உடல் மீட்கப்பட்டது. இங்கு மெட்ராஸ் ரெஜிமென்டை சேர்ந்த 30 ராணுவ வீரர்கள் நேற்று காலை மீட்பு பணியை தொடங்கி உள்ளனர்.

வயநாடு மாவட்டம் மேப்பாடி புத்துமலையில் நிலச்சரிவில் சிக்கிய 18 பேரில் இதுவரை 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில்அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாலும், அந்த பகுதி முழுவதும் சகதி நிறைந்து காணப்படுவதாலும் மீட்பு படையினரும் பொதுமக்களும் உயிரை பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் மழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு உட்பட  8 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் 80க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான இடங்களில் மழை குறைய தொடங்கியுள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் நேற்று மதியம் 12 மணி முதல் செயல்பட தொடங்கியது. கேரளாவில் கடந்த 3 நாட்களில் கனமழைக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்காக கேரளா முழுவதும் 1,621 நிவாரண முகாம்கள்  அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 74 ஆயிரத்து 400 குடும்பங்களை சேர்ந்த  சுமார் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தஞ்சம் புகுந்துள்ளனர். கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், ‘‘நிவாரண முகாம்களில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஏராளமான பொருட்கள் தேவைப்படுகிறது. இவ்வருடம் நிவாரண நிதி கேட்டு எந்த அறிவிப்பும் வெளியிடப்படாவிட்டாலும் ஏராளமானோர் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர். இதை பொறுக்க முடியாமல் சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்