Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு அதிர்ச்சி சிபிஎஸ்இ கட்டணம் 24 மடங்கு அதிகரிப்பு

ஆகஸ்டு 12, 2019 04:21

புதுடெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் செலுத்தி வந்த ரூ50 என்ற தேர்வுக் கட்டணத்தை ரூ1200 என சிபிஎஸ்இ உயர்த்தியுள்ளது. ரூ750 செலுத்தி வந்த பொதுப் பிரிவினருக்கு ரூ1500 என கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால், எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ என்னும் மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை சிபிஎஸ்இ அதிரடியாக உயர்த்தியுள்ளது. மேற்கண்ட வகுப்புகளில் படித்து வரும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் இதுவரை ரூ50 தேர்வுக் கட்டணம் செலுத்திவந்தனர். அவர்கள் இனிமேல் ரூ1200 செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் முன்பு ரூ750 செலுத்தி வந்தனர். இனிமேல் ரூ1500 செலுத்த வேண்டும்.

உயர்த்தப்பட்ட புதிய தேர்வுக் கட்டணத்தின்படி எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள் 5 பாடங்களுக்கு தேர்வுக் கட்டணமாக தற்போது ரூ1200 செலுத்த வேண்டும். பழைய கட்டணத்தின் படி ரூ50 செலுத்தினால் போதும் என்று இருந்தது. தற்போது 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுப்பிரிவு மாணவர்கள் 5 பாடங்களுக்கான தேர்வு எழுத முன்பு ரூ750 செலுத்தினால் போதும், தற்போது அவர்கள் ரூ1500 செலுத்த வேண்டும். இந்த புதிய கட்டணம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொருந்தும் என்று சிபிஎஸ்இ கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பழைய கட்டண விகிதத்தின்படி, எஸ்சி எஸ்டி பிரிவு மாணவர்கள் 12ம் வகுப்பில் ஏதாவது கூடுதல் பாடங்களை எழுதினால் அவர்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்வு எழுதினால் கூடுதலாக ரூ300 சேர்த்து செலுத்த வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் இது போல கூடுதலாக பாடத்தை எழுத விரும்பினால் முன்பு ரூ150 செலுத்த வேண்டும். தற்போது அவர்கள் ரூ300 கூடுதலாக செலுத்த வேண்டும். 

நூறு சதவீதம் கண்பார்வையற்றவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தின்படி வித்தியாச தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தாவிட்டால் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள். இடம் பெயர்வதற்கான(Migration) கட்டணம் முன்பு ரூ150 என இருந்தது. தற்போது அந்த கட்டணம் ரூ350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிபிஎஸ்இ தேர்வு எழுத பதிவு செய்துள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு  மாணவர்கள் 5 பாடங்களுக்கு ரூ10 ஆயிரம் செலுத்த வேண்டும். ஏற்கெனவே இந்த கட்டணம் ரூ5 ஆயிரம் என இருந்தது. இவற்றில் 12ம் வகுப்பு மாணவர்கள் 5 பாடங்களுடன் கூடுதல் பாடங்களை எழுத விரும்பினால் முன்பு ரூ1000 செலுத்த வேண்டும். இப்போது ரூ2000 செலுத் வேண்டும்.

* எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ50  தேர்வுக் கட்டணம் செலுத்தினர். இனி ரூ1200 செலுத்த  வேண்டும்.
* பொதுப்பிரிவினர் முன்பு ரூ750 செலுத்தி வந்தனர். இனிமேல் ரூ1500 செலுத்த வேண்டும்.

தலைப்புச்செய்திகள்