Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஞ்சிபுரம் கலெக்டர் அதிகார துஷ்பிரயோகமா? பதிலடியாக போலீசார் வெளியிட்ட வீடியோ

ஆகஸ்டு 12, 2019 06:56

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை, கலெக்டர் ஒருமையில் திட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது போலீசார் பதிலடியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக இருந்த காவல் ஆய்வாளர், விஐபி வரிசையில் பொதுமக்களை அனுமதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, காவலரை ஒருமையில் திட்டி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கடுமையான வார்த்தைகளுடன் அவர் போலீசை திட்டும் வீடியோ வைரலாக பரவியது.

ஒரு அரசு உயர் அதிகாரி போலீசாரை இப்படி அனைவரும் பார்க்கும் விதத்தில் தரம் குறைந்த வார்த்தைகளால் திட்டுவது ஏற்புடையதா? என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்க்கு தமிழ்நாடு காவலர் குடும்ப நலக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன் கலெக்டர் பொன்னையா மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, அத்திவரதர் வைபவத்தில் தாங்கள் படும் அல்லல்கள், பணிச்சுமைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் போலீசார் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த நிலையில், உரிய பாஸ் இல்லாமல் விஐபி தரிசன வழியில் கலெக்டர் பொன்னையா அவரது குடும்பத்தினரை அழைத்துச் செல்லும் வீடியோவை போலீசார் சிலர் சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளரை திட்டிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்தினரை, பாஸ் இல்லாமல், தனது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி விவிஐபி நுழைவு வாயில் வழியாக அழைத்துச் செல்லும் காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்