Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் பா.ஜனதாவில் இணைந்தார்

ஆகஸ்டு 12, 2019 11:50

அரியானா: அரியானா இவ்வாண்டு தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் காமென்வெல்த் போட்டிகளில் தேசத்துக்காக பதக்கங்களை குவித்த பிரபலமான மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், தந்தை மஹாவீர் போகத்துடன் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார்.  

பா.ஜனதாவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பபிதா போகத், நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர். 2014-ம் ஆண்டில் இருந்து அவரின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறேன். பிரதமர் மோடி இத்தேசத்திற்காக நிறைய சேவைகளை செய்துள்ளார். விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் பா.ஜனதாவில் இணைவது தள்ளிப்போய்விட்டது. இப்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து வரலாற்றை தங்க வரிகளால் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எழுதியுள்ளது. இத்தருணத்தில் கட்சியில் இணைவதில் எனக்கு மகிழ்ச்சியாகும். என்னைப்போன்று பலரும் பா.ஜனதாவில் இணைய விரும்புவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் நிலவுகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் பா.ஜனதாவினர், காஷ்மீர் பெண்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மனோகர் லால் கட்டாரும், காஷ்மீரிலிருந்து இனி பெண் எடுக்கலாம் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பபிதா அதனை ஆதரித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், அரியானாவில் குறைந்துவரும் பாலின விகிதாச்சாரத்தை பற்றி பேசும்போதுதான் ஆண் - பெண் விகிதத்தை அதிகரிக்க இனி காஷ்மீரில் இருந்தும் பெண் எடுக்கலாம் என்று கூறியிருந்தார்.  நம் காஷ்மீரின் மகள்களையும், சகோதரிகளையும் அவமதிக்கும் வகையில் அவர் ஏதும் கூறவில்லை. ஊடகங்கள்தான் அவரின் கருத்துகளைத் திரித்துவிட்டன என விளக்கியுள்ளார். 

கடந்த 2016-ம் ஆண்டு அமீர்கான் நடித்த தங்கல் படத்தின் கருவே பபிபதா, கீதா போகத் சகோதரியும், அவருடைய தந்தை  மஹாவீர் போகத்தும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்