Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

பிப்ரவரி 22, 2019 06:44

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு உடனடியாக அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.  

“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று தமிழக அமைச்சரவை கூடி கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக கவர்னருக்கு அனுப்பி வைத்து 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுத்து உத்தரவு பிறப்பிக்காமல், கவர்னர் தொடர்ந்து கெட்டியான அமைதி காப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.  

இவர்களது விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 7½ கோடி தமிழர்களுக்கும் இது பெரும் ஏமாற்றத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.  

தற்போது, பா.ஜ.க.வுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வைத்திருக்கும் முதல்- அமைச்சர், 7 தமிழர்களின் விடுதலை, ‘நீட்’ தேர்வு மசோதாக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிடுவது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிடுவது உள்ளிட்ட மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து நிபந்தனை வைத்திருக்கலாம்.  

ஆனால், அப்படியெல்லாம் நிபந்தனை வைத்திருக்கிறாரா என்பதும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தமிழக கவர்னரை நேரில் சந்தித்து அமைச்சரவை தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு, பல்லாண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்த வேண்டும்.  

இவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு உடனடியாக அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது.  

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-2019-ம் கல்வியாண்டில் இருந்து பொதுத்தேர்வு என்று, பெற்றோரும் இளம் மாணவ, மாணவியரும் அதிர்ச்சிக்கு ஆளாகி மன அழுத்தத்தினால் அல்லலுறும் வகையில், அ.தி.மு.க அரசு அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அ.தி.மு.க அரசு செயல்படுத்துவது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஆகியோரின் குதர்க்க மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.  

மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று புதிய கல்விக்கொள்கையை வகுத்த ஈரம் காய்வதற்குள், மத்திய பா.ஜ.க. அரசே நினைத்துப் பார்க்காத அவசரத்தில், அதை அ.தி.மு.க. அரசு பள்ளிப் பருவத்தில் உள்ள மாணவர்கள் மீது திணிப்பதும், கல்விக்கூடங்களுக்கு செல்லும் மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து இருந்து வேலைக்குப் போகும்வரை பரீட்சை எழுதிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற நெருக்கடியைச் சுமத்துவதும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.  

அரசாணை இல்லாமல் அரசு பொதுத்தேர்வு குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்காமல் முதன்மை கல்வி அலுவலர்கள் எப்படி பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று ஒரு சுற்றறிக்கை அனுப்ப முடியும்?. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு கோமாளித்தனமான அரசு என்பதற்கும், அரசு என்ற போர்வையில் மனம்போன போக்கில் துக்ளக் தர்பார் நடத்துகிறார்கள் என்பதற்கும் இதை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?.  

மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவினை உடனடியாக அ.தி.மு.க. அரசு கைவிட வேண்டும். கைவிட்டு, அதுகுறித்து அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

தலைப்புச்செய்திகள்