Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து பெண்ணுக்கு இறுதி காரியம் செய்த இஸ்லாமியர்கள்

ஆகஸ்டு 13, 2019 05:06

வாரணாசி: மலேரியா நோயால் உயிரிழந்த இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு, இஸ்லாமியர்கள் முன்னின்று இறுதி காரியங்கள் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹர்ஹுவா பகுதியை சேர்ந்தவர் சோனி. 19 வயதான இவர் காலரா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவந்தார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் சோனி உயிரிழந்தார். சோனியின் தந்தை ஹோரிலால் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாய் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். சோனியின் சகோதரரின் வருமானத்தில் தான் குடும்பம் நடத்திவந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், சோனியின் இறப்பு அவர்கள் குடும்பத்தில் பேரிடியாக இறங்கியது. சோனிக்கு இறுதிகாரியங்கள் செய்வதற்கு பணமில்லாமல் திகைத்து நின்ற அவரது சகோதரருக்கு, அருகிலிருந்த இஸ்லாமியர்கள் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம்; இறுதிகாரியங்களை செய்வதற்கு உதவுவதாக அவருக்கு நம்பிக்கை தெரிவித்தனர்.

சொன்னபடியே இறுதிகாரியங்களை செய்த இஸ்லாமியர்கள், தலையில் குல்லா அணிந்தவாறு அந்த பெண்ணின் சடலத்தை தங்கள் தோள்களில், மணிகர்னிகா வரை தூக்கிச் சென்றனர். அதோடு, இந்து மதத்தில் பின்பற்றப்படும் சடங்குகளை செய்ததோடு “ராம் நாம் சத்யாஹை” என்று கூறியவாறே சென்றனர். அதோடு, சோனியின் சகோதரருக்கு இறுதிகாரியங்களை செய்வதற்கு மயானத்தில் உதவிசெய்தனர்.

சோனியின் இறுதி காரியத்திற்கு உதவி செய்த ஷகீல் என்பவர் இது குறித்து கூறும்போது “இது தான் சத்தியம். வாழ்க்கையின் முடிவு இதுதான். ஆனால், சிறுசிறு விசயங்களுக்காக நாம் நமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார். மதவேறுபாடுகளைக் கடந்து பெண்ணின் இறுதிச்சடங்கிற்காக இஸ்லாமியர்கள் உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

தலைப்புச்செய்திகள்