Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

35 ஆண்டுகளுக்கு முன் மதம் மாறியவர்களை ஒதுக்கிவைத்த கிராமம்

ஆகஸ்டு 14, 2019 06:48

மதுரை: மதுரையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு, மதம் மாறிய 30 குடும்பங்களை ஊரை விட்டு தற்போது ஒதுக்கிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவத்தை தழுவியதால் தந்தையையே, மகன்கள் ஒதுக்கி வைத்த அவலமும் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில், காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில், 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 1984-ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் 4 பிரார்த்தனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு எந்வொரு தடங்கலும் இன்றி இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டு ஜனவரியில் இந்து முன்னணி சார்பில் சத்தியமூர்த்தி நகரில் கிளை தொடங்கப்பட்டுள்ளது. அதையடுத்து, பிற மதம் தழுவுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மதம் மாறியவர்கள் பொது இடங்களில் நடமாடவும், குழாயில் குடிநீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 5,000  ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளனர்.

இதுபோன்ற கட்டுப்பாடுகளுக்கு பயந்து 30 குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விடாப்பிடியாக இருந்த எஞ்சிய 30 குடும்பத்தினர் இந்த கொடுமைகளை தொடர்ந்து அனுபவித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

ஆனால், தங்கள் சமூகம் பாரம்பரிய கட்டுப்பாட்டை கொண்டதாகவும், அதனை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் யாரையும் அனுமதிக்க முடியாது என்றும் மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர். மேலும், தங்கள் வீட்டுப் பெண்களை மதம் மாற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதம் மாறிய குடும்பத்தை ஊர்தான் ஒதுக்கி வைக்கிறது என்றால், மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகளே ஒதுக்கும் அவலமும் சத்தியமூர்த்தி நகரில் நடைபெறுகிறது.

சத்தியமூர்த்தி நகரில் மதம் மாறியதால் அனுபவிக்கும் கொடுமை குறித்து பாதிக்கப்பட்டவர்கள், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த பிரச்னை எட்டியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்