Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பளபளக்கும் கழிப்பறை, சொகுசான படுக்கை வசதியுடன் ஜொலிக்கும் அரசு பேருந்துகள்

ஆகஸ்டு 14, 2019 07:20

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் 15 பேருந்துகள் கிளாசிக் எனப்படும் கழிவறை வசதி கொண்டவையாகும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பாக, இரண்டு கட்டங்களாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5,000 புதிய பேருந்துகளை வாங்க, அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. கடந்த இரண்டரை ஆண்டு காலகட்டங்களில், 1,160 கோடி ரூபாய் செலவில், 3,881 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று 154 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய பேருந்துகளை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதேபோல் சுற்றுலாத்துறை சார்பில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 43 இருக்கைகள் அடங்கிய நவீன வசதியுடன் கூடிய வால்வோ பேருந்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்து, பின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் பேருந்திற்குள் சென்று பேருந்தின் வசதிகளை பார்வையிட்டனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கழிவறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து பின்னோக்கி வருவதை அறியவும், பயணிகளின் இறங்கும் இடத்தை அறிவிக்கவும், ஒலி எச்சரிக்கை கருவி வசதி உள்ளது. மாற்று திறனாளிகள் கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்புக்காக வைக்கவும் வசதி உள்ளது. மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்