Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சென்றது சந்திரயான்-2

ஆகஸ்டு 14, 2019 07:56

புதுடெல்லி: புவி வட்டப் பாதையில் இருந்து விலகிய சந்திரயான் 2 விண்கலம், நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. சந்திரயான் 2 விண்கலம், கடந்த மாதம் 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2-ஆனது நீள் வட்டப் பாதையில் புவியை சுற்றி வந்தது. 

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் புவி வட்டப் பாதையை சுற்றி வரச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக தொலைவை அதிகரிக்கச் செய்து நிலவின் வட்டப் பாதைக்குள் விண்கலத்தைச் செலுத்துவதே இஸ்ரோவின் திட்டம். அதன்படி, ஜூலை 23ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 6ஆம் தேதி வரை சந்திரயான் 2 ஆனது, புவியைச் சுற்றும் தொலைவு 5 முறை அதிகரிக்கப்பட்டது. தற்போது நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் அந்த விண்கலத்தைச் செலுத்த இஸ்ரோ ஆயத்தமாகி உள்ளது.

புதன் கிழமை அதிகாலை 2.21 மணி அளவில் புவி வட்டப் பாதையில் இருந்து சந்திரயான் 2ஐ இஸ்ரோ விஞ்ஞானிகள் வெளியேற்றினர். இதற்காக, விண்கலத்தின் திரவ எரிபொருள் எஞ்சினானது 20 நிமிடங்களுக்கு இயங்க வைக்கப்பட்டது. அதன் மூலம், புவி வட்டப் பாதையில் இருந்து விடுபட்ட சந்திரயான் 2 தற்போது நிலவின் வட்டப் பாதையை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கி உள்ளது. 20ஆம் தேதி அன்று நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான் 2 செலுத்தப்படும். அப்போதும், எஞ்சின் இயங்க வைக்கப்படும்.

புவி வட்டப் பாதையில் இருந்து விலகிச் செல்வதற்கு எஞ்சின் இயக்க வைக்கப்பட்டதைப் போல், நிலவை நெருங்குவதற்கு 5 முதல் 6 முறை வரை எஞ்சின் இயங்க வைக்கப்படும். பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் திட்ட செயல்பாடுகளுக்கான வளாகத்தில் இருந்து சந்திரயான் 2 விண்கலத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்று வட்டப் பாதையை சந்திரயான் 2 அடைந்ததும், விக்ரம் லேண்டர் மூலம், பிரக்யான் ரோவர் நிலவில் தரை இறக்கப்படும். செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அது நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

நொடிக்கு ஒரு செண்டி மீட்டர் என்ற வேகத்தில், பிரக்யான் ரோவர் இயங்கும். ஆனால் விக்ரம் லேண்டரை நிலவில் தரை இறக்கும் அந்த 15 நிமிடங்கள் பரபரப்பாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். 
 

தலைப்புச்செய்திகள்