Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனமழை, வெள்ளத்திற்கு 500 பேர் பலி: பீகார், குஜராத், கேரளா, அசாம் மோசமான பாதிப்பு

ஆகஸ்டு 14, 2019 12:18

புதுடெல்லி: தென் மேற்கு பருவ மழை காரணமாக  இந்தியாவின் 8 மாநிலங்களில்  கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் பீகார், குஜராத், கேரளா, அசாம்  மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 91 பேரும், கர்நாடகாவைச் சேர்ந்த 54 பேரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 48 பேரும், ஒடிசாவை சேர்ந்த  8 பேரும்  உயிரிழந்துள்ளனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் முதல் வாரங்களுக்கு இடையில், குஜராத்தில் இருந்து குறைந்தது 98 பேரும், பீகாரில் 123 பேரும், அசாமில் 71 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  14 மாவட்டங்களில் குறைந்தது 97 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேரை இன்னும் காணவில்லை. வயநாடு மாவட்டத்தில் புத்துமலை, மலப்புரம் மாவட்டத்தின் காவாலப்பாறா உள்ளிட்ட 80 இடங்களில்  பெரியதும், சிறியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரத்து 239 முகாம்களில், இரண்டு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கர்நாடகாவை பொறுத்த குறைந்தது 54 பேர் இறந்துள்ளனர், மேலும் 12 பேர் காணவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் 1,224 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 3,93,956 பேர்  தஞ்சமடைந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை ஹம்பியில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 365 பேரை மீட்டது. ஜெர்மனி, பிரான்ஸ்,  அமெரிக்கா, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 18 வெளிநாட்டவர்களும் கொப்பல் மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரை வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 48 ஆனது. 3 பேரை இன்னும் காணவில்லை. மாநில  முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அரசிடமிருந்து 6800 கோடி ரூபாய் உதவி கோரியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து உள்ளது. நிலைமை மேம்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பலத்த  மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.  இதுவரை மாநிலத்தில் வெள்ளம் மற்றும் பெய்த மழையால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகாரில், பலத்த மற்றும் இடைவிடாது பெய்த  மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்து உள்ளது. 12 மாவட்டங்களில் மொத்தம் 81.57 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் கன மழையால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழை  மற்றும் வெள்ளத்தில் 71 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தால் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது.

ஒடிசாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால்  8 பேர் பலியாகி உள்ளனர்.  நபரங்பூர், கலஹந்தி, காந்தமால், கோராபுட் மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புகள்  பதிவாகியுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை காரணமாக 6 பேர்  உயிரிழந்து உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்