Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகளை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட தந்தை ஓட ஓட வெட்டிக் கொலை

ஆகஸ்டு 14, 2019 01:23

மதுரை: மதுரை அருகே மகளை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட தந்தை ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிகண்டனின் மூத்த மகள் துர்கா தேவி வைகை ஆற்றின் கரையில் உள்ள திறந்த வெளி கழிப்பறைக்கு சென்றுள்ளார். 

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அல்வா என்கிற உமா மகேஷ்வரன், துர்கா தேவியை கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை தந்தை மணிகண்டன் தட்டிக் கேட்க இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மணிகண்டன் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது தனது நண்பர்கள் மீனாட்சி சுந்தரம், மாரிமுத்து ஆகியோருடன் சேர்ந்து மணிகண்டனை வழிமறித்த உமாமகேஷ்வரன் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சாலையில் ஓடிய மணிகண்டனை மூன்று பேர் கும்பலும் விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளது. இதில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு வந்த மதிச்சியம் காவல் நிலைய போலீசார் மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அல்வா என்கிற உமாமகேஷ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் மீனாட்சி சுந்தரம், மாரிமுத்து ஆகியோரையும் கைது செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்