Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1000 பட்டதாரிகளிடம் வேலைவாய்ப்பு மோசடி: டி.பி.ஐ நிறுவனம் மீது புகார்

ஆகஸ்டு 15, 2019 08:02


சென்னை: சென்னையில் வங்கியில் பணி என்று 1000 பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு சேர்த்து 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மோசடி செய்து வருவதாக டிஜிட்டல் பேங்கிங் இண்டியா என்கிற தனியார் நிறுவனம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சென்னை கோடம்பாக்கம் , போரூர் உள்பட 4 இடங்களில் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை பிரவீன், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

வங்கியில் வேலை என்று வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தரகர்கள் மூலம் விளம்பரம் வெளியிட்டு இதுவரை 1000 பட்டதாரிகளை பணிக்கு சேர்த்துள்ளனர். பலரிடம் இது மத்திய அரசு பணி என்று ஏமாற்றி 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை தரகர்கள் மூலம் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

சிலரிடம் முன்பணம் பெறாமல் வேலைக்கு வந்தால் மட்டும் போதும் என்கிற ரீதியில் பணிக்கு சேர்த்துள்ளனர். வங்கிகளின் கணினி சேவைகளை ஒப்பந்தம் எடுத்து தங்கு தடையின்றி வழங்குவதுதான் இவர்களின் பணி என்றும் ஆபரேசனல் எக்சிகியூட்டிவ் என்ற பெயரில் பணி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஆர்வத்துடன் பணிக்கு சேர்ந்த இளைஞர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் வாழ்க்கையை தொலைத்து விட்டதாக தவித்து வருகின்றனர் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்.

இந்த நிலையில் கோடம்பாக்கம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதனப்படுத்திய பிரவீன் என்பவர் விரைவில் ஊதியம் நிலுவையின்றி வழங்கப்படும் என்று உறுதி அளித்து அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்து சென்றார்.

அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம், சில ரவுடிகளை ஏவி, பிரவீன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்தார். இவர்களை போன்ற நபர்கள் மற்றும் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி லட்சங்களை பறித்துக் கொண்ட இடைதரகர்கள் மீதும் காவல்துறையினர் புகார்களை பெற்று உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறியுள்ளனர்
 

தலைப்புச்செய்திகள்