Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன?

ஆகஸ்டு 16, 2019 07:30

சென்னை: இந்திய கிரிக்கெட் அணிக்காக 1988 முதல் 1990 வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடிவர் வி.பி. சந்திரசேகர். கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவர், தற்போது நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டிகளில் பங்கேற்ற காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை இவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து உடலை கைப்பற்றினர். இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட  நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதுபற்றி அவர் மனைவி கூறுகையில், “நேற்று மாலை 5.45 மணியளவில் தேநீர் தருவதற்காக அவரது அறைக்கு சென்றேன், அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல்  வழியாக பார்த்தபோது மின்விசிறியில் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். கிரிக்கெட் தொடர்பான தொழில்களில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் கூறியிருந்தார்” என்றார்.

இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சந்திரசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இவரது இறப்பிற்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்