Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

ஆகஸ்டு 16, 2019 11:13

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவல்நத்தம் டாஸ்மாக் கடை விற்பனையார் ராஜா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ராஜாவின் மனைவியின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அங்கன்வாடி மையத்தில் பணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பேதப்பனுரில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜா என்பவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு கடையில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.ராஜாவை கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், இறந்த பணியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் திருட்டுகளை தடுக்கவும், கண்டறியவும் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, டாஸ்மாக் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிர்வாக இயக்குனர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், கொலைசெய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியருக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் கடைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசுக்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். ராஜாவின் குடும்பத்துக்கு சட்ட ரீதியான இதர பணப் பலன்களையும் உடனே வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்