Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

26-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த ஐ.டி ஊழியர்

ஆகஸ்டு 16, 2019 11:37

சென்னை: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஈஸ்வர் ராவ் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தார். நேற்று இரவு சோழிங்கநல்லூரில் உள்ள 29 அடுக்குகளைக் கொண்ட பாஷ்யம் குடியிருப்பில், 26-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திடீரென இரவில் சத்தம் கேட்டதால், பணியில் இருந்த காவலர்கள் சென்று பார்த்தபோது, ஈஸ்வர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலை குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு காவலர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சென்ற செம்மஞ்சேரி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், தாய். தந்தையை இழந்த ஈஸ்வர், உறவினர்களுடன் நெருங்கிய தொடர்பு எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். தனியார் மென்பொருள் நிறுனத்தில் பணிபுரிந்து வந்த அவர், ஊதியத்தில் நண்பர்களுடன் மது அருந்துவது, ஊர் சுற்றுவது என ஜாலியாக இருந்துள்ளார்.

நண்பர்கள் அறையில் சேர்ந்து தங்கி வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான அவர் ஒழுங்காக பணிக்கு செல்வதில்லை. இதனால் சமீபத்தில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மனவேதனையில் இருந்த ஈஸ்வர், புதன்கிழமை, திருவான்மியூர் நியூ பீச் பகுதியில் ஆட்டோவில் ஏறி தனது, நண்பர்கள் தங்கியுள்ள சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை எதிரே உள்ள 29 மாடிகள் கொண்ட பாஷ்யம் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார்.

அங்கு நண்பர்கள் யாரும் இல்லாததால், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து திரும்பியுள்ளார். வெளியில் நின்றுகொண்டிருந்த அதே ஆட்டோவில் ஏறி நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அத்தை வீட்டுக்கு இரவு தங்கச் சென்றுள்ளார். அத்தை வீட்டில் அவரை இரவில் தங்குவதற்கு அனுமதிக்காததால், அங்கிருந்து மீண்டும் சோழிங்கநல்லூரில் உள்ள பாஷ்யம் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஆட்டோவில் திரும்பியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் அறிவு என்பவரை பத்து நிமிடம் காத்திருக்கும்படி கூறி விட்டு சென்ற ஈஸ்வர் ராவ் மீண்டும் திரும்பவில்லை. சற்று நேரத்தில் 26-வது மாடியில் இருந்து ஈஸ்வர் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


 

தலைப்புச்செய்திகள்