Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆடு மேய்த்தாலும் ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருது வாங்கிய சாதனை நாயகன் பெரியசாமி

ஆகஸ்டு 17, 2019 06:08

சென்னை: முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு பல உதாரணங்களை அடுக்கி கொண்டிருக்க முடியும். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் டிஎன்பிஎல் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியசாமி. 

2019ம் ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்திருக்கிறது. இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியை வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளது சென்னை சேப்பாக் கில்லீஸ் அணி. இந்த தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு இளம் வீரர் தான் பெரியசாமி. இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றி, ஒட்டு மொத்த தொடர்நாயகன் விருதுக்கும் சொந்தகாரர் ஆகியுள்ளார் பெரியசாமி 

ஒட்டு மொத்த தமிழக ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் அவர் திருப்பியது எப்படி என்ற கேள்விகளுக்கு விடை தேடினால் கிடைத்த தகவல்கள் ஆச்சர்யம் அளிக்க கூடியவை. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தான் பெரியசாமி. கணேசன் - காந்தாமணி தம்பதியினரின் 3வது மகன். லாரி ஓட்டுனரான கணேசன் உடல்நிலை காரணமாக, தற்போது வீட்டிலேயே டீ கடை நடத்தி வருகிறார். பெரியசாமியின் தாய் ஆடுமாடுகள் வளர்த்து வருகிறார். சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வமில்லாத பெரிய சாமி ஆடு மேய்ப்பது முதல் நெசவு, நூல் மில் வரை பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார். 

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள பெரியசாமிக்கு ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் பந்து வீச பயிற்சி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளை பெற்ற பெரியசாமிக்கு தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் சென்னை சேப்பாக் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்ட பெரியசாமி தனது திறமையை தமிழகம் அறிய செய்துள்ளார். 

பெரியசாமியின் விளையாட்டு திறன் அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. அவரது கிராமத்தில் குடும்பத்தினரும், கிராம இளைஞர்களும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

ஆடு மேய்த்த பெரியசாமி கிரிக்கெட் ஆடுகளத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சாதனைக்கு படிப்பு முக்கியம் இல்லை, லட்சியமும் அதை வென்றெடுக்கும் ஆர்வமும் இருந்தால் போதும் சாதனை படைக்கலாம் என்ற வார்த்தைகளை மெய்யாக்கி இருக்கிறார். 
 

தலைப்புச்செய்திகள்